கணைகளால் அடைந்த கனிகள்!
கேள்வி:
"பெண்களின் விதவைக் கோலம்" என்று தலைப்பிட்டு நீங்கள் கவிதைச் சிட்டு (சனவரி 1990 இதழில்) எழுதியுள்ள -
"கற்புக் கசாப்புக்காரன்
காதலித்து வெட்டுகிறான்;
ஆடுகளோ...
கதறாமல் மடிகின்றன"
-- விளக்கம் தேவை!
[நமது வளைத் தளங்களில் " " என்ற தலைப்பில் இக்கவிதைப்
பதிவு உள்ளது]
பதில்:
ஒரு கல்லூரி மாணவி உடன் படிக்கும் மாணவன் ஒருவனை காத லிக்கின்றாள்; காதலனும் அருகே இருக்கின்ற கோயிலுக்கு அவளை அழைத்துச் சென்று, மனித சிற்பிச் செதுக்கிட்ட கடவுள் என்று நினைக்கப்படும் கற்சிலை ஒன்றை சாட்சியாக வைத்து அவளுக்கு "உன்னை அன்றி வேறு எந்தவொரு பெண்ணையும் திருமணம் செய்யமாட்டேன்" என்று சத்தியமும் செய்கின்றான்; மாணவியும் இறைவன் மெய்யாகவே இருப்பதாக நம்பி காதலன் ஒருபோதும் தன்னைக் கைவிட மாட்டார் என்கின்ற உறுதியில் அவனைக் காதலிப்பது மூலமாக உலகில் பிறந்ததின் பயனை அனுபவித்ததாக அவ்வப்போது கனவுகளில் பெருமிதம் அடைகின்றாள்.
கல்லூரிப் படிப்பு முடிந்த பின்னர் அவள் எதிர்பாராத விதமாக பெற்றோர் அவளுடைய திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். மாணவியோ, தான் காதலித்தவனையே திருமணம் செய்துகொள்ளும் முடிவில் துருவப்பிரதேசப் பனிமலைகள் போல் பிடிவாதமாக இருக்கின்றாள். சமயம் தடுக்கின்றது; சாதி குறுக்கிடுகின்றது; உடன்பிறந்தோரும் உற்றாரும் அவளின் முடிவுக்கு எதிராக இருக்கின்றனர்; தாயும் தந்தையும் அவளின் பிடிவாதத்தை கைவிடுமாறும் இல்லையென்றால் இருவரும் தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டுகின்றனர்; அவர்களிடமிருந்து வெளிப்பட்ட எச்சரிக்கைச் சூட்டில் மகள் (மாணவி) பாசப்பரிதவிப்பில் உருகிப் பணிகின்றாள்; மானுட நம்பிக்கைப்படிக்கு தெய்வம் இருந்தால்தானே எல்லோரும் காண வெளிப்பட்டு அவளின் விருப்பத்தை நிறைவேற்றும்.
பெற்றோர் ஏற்பாட்டின்படி முன்பின் பார்த்தறிந்திடாத வரதட் சணைபேராசையில் அவளின் நிலைமைத் தெரிந்தும் இணக்கம் தெரிவித்த எவனோ ஆணுக்கு கழுத்தைக் காட்டுகின்றாள். அவளைக் காதலித்தவனோ தவிக்கின்றான்; தெய்வம் அவனுடைய தவிப்புகளைக் களைய முற்படாது அவனுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தபடி பாற்கடல் மேல் பள்ளிகொண்டிருந்தானோ என்னவோ காதலன் மேற்கொண்டு வாழ விருப்பமின்றி பூமிக்கடலில் விழுந்து உயிரை விடுகின்றான்.
மாணவியின் பெற்றோர் அவள் மீது கனிவுமழைப் பொழிகிறவர்கள் தான்; அன்புச் செலுத்துவதில் அப்படியே உருகிப்போகிறவர்கள்தான்; ஆனாலும் புலக்த்திலிருக்கும் மூட வழக்கங்களுக்கு ஆண்டுதோ ரும் தேர்இழுக்கிறவர்கள்; அதனால் மாணவியின் உள்ள ஆவல்கட்கு சவப் பெட்டி செய்கிறார்கள்; காதலர்களின் கற்பு நெறி உணர்வுகளை வெட்டிச் சிதைக்கின்றார்கள்.
Page-2
திருமணமாகியும் மகள் தன் காதலனை மறக்காமல் உறங்குகின்ற நேரங்களிலும் அவ்வப்போது கனவுகளிலும் கண்ணீர்வடிக்கிறாளே என்று மருமகனின் அன்னை மூலமாக (சம்மந்தி) தெரிவிக்க அறியவருகிறாள்; தன்னுடைய வாழ்கையில் கற்புநெறியை நழுவிடாது கடைப்பிடித்திடும் அன்னை, மாணவிக்கு பதிபக்தியை புகட்டுகிறாள்; அன்னையின் வேதனைகளை முடிவுக்கு கொணர்ந்திட மாணவியும் பதிப்பக்திச் சுருக்கிட்டு தன்னுடைய கற்புநெறியுடன் இரண்டறக் கலந்திட்ட தன்காதல் ஆவலைத் துடிக்கத் துடிக்க... மெல்ல... மெல்ல தற்கொலை பண்ணிக்கொண்டு செத்துப்போ என்று துரத்திட முயற்சிக்கின்றாள்!?
இப்படியே (மற்றோர் காட்சி), கணவனின் கைத்தளம் பற்றிய நினைவில் வாடும் பெண்களை அவர்களின் மனத்தவிப்புக்களைப் பற்றி சிந்திக்க முற்றுமாக மறுக்கின்ற மனிதநேயமற்ற ஆணாதிக்கக் கழுகுகளுக்கு பசி தீர்க்கும் வெண்மை நிறக்கோழிக் குஞ்சுகளாகத் தென்படுகிறபோது அங்கே கணவனை இழந்த மனைவியரின் கற்புநெறி களங்கப்படுத்தப் படுகிறது.
இதைத் தெரிந்தும் இளம் வயதிலேயே நடைச் சவமான ஒரு பெண் ணுக்கும் மூலைக் குப்பைத்தொட்டிக்குள் முளைத்து எட்டிமரமாய் முதிர்ந்திட்ட மூட நம்பிக்கை அடிப்படையில் மறுமணம் செய்துவைக்க மறுக்கும் பெற்றோகள்; அந்தப் பெண்ணின் மீது அனுதாபம் கலந்த பாசத்தை களங்கம் ஏதுமில்லாமல் குவிக்கின்ற அதே நேரத்தில் இளமையில் விதவையான அவளுடைய சதைகளோடு ஒன்றிட்ட இயற்கை ஊடுறுவல்களை (உணர்ச்சிகளை) மேலே சொல்லப்பட்ட மாணவியினுடைய நிலைமையைப் போன்றே துடிக்கத் துடிக்க... மெல்ல... மெல்ல... ஒருவழியாகக் கொன்றுவிடுகின்றார்கள். இந்தப்படிக்கு அபலைப் பெண்களின் இருதயத் துடிப்புக்களை (உணர்வுகள்) அநியாயமாக கொல்லப்படுகின்ற தன்மையைக் வெளிப்படுத்துகின்றன உங்கள் கேள்விக் கணையிலிருக்கும் என்னுடைய கவிதை வரிகள்.
இங்கே என்னுடைய கவிதையில் அறியப்படுகின்ற'ஆடுகள் ‘ எனப்
படுவன காதலனை மறக்க அல்லற்படும் மாணவி, மற்றும் வலுக்கட்டாயமாக உடற்சுகம் விலகிய துறவி (இளம் விதவை) ஆகிய இரு மானுடப் பெண்களையும் அவர்களின் உடல் நாடல்களையும் இதயத் தேடல்களையும் குறிக்கின்றன. 'காதலித்து..." என்று தெரிவிக்கின்ற நிலவரம் பெற்றோர், உடன் பிறந்தார், உறவினர்கள் அனைவரும் மாணவி மற்றும் இல்லறம் விலகிய துறவியர் மீது காட்டிடும் காளி மற்றும் போலிப்பரிவுகளை அறிவிக்கின்றது. கற்புக் கசாப்புக்காரன் என்பது அத்தகைய போலிப் பரிவுகட்கு ஆதாரங்களான மத வெறிகட்கு முதுகுகாட்டும் அவர்களின் ஆதரவு நிலைமையை அல்லது கொடுமைகளிலருந்து விடுதலைப் பெற முற்படாத சாதி அடிமை பலவீனங்களைக் குறிப்பிடுகிறது
விளக்கம் கேட்ட சேப்பாக்கம் அரசு துறை மருத்துவருக்கும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் பணிப்புரிந்திடும் கவிதைச் சிட்டு வாசகி (1990காலகட்டத்தில்) திருமதி ராணி அவாகளுக்கும் என் நன்றி! கணைகள் தொடரட்டும்.
Comments
Post a Comment